Breaking News

காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள், எங்கள் உள்நாட்டு விவகாரம்’ – ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் உள்நாட்டு விவகாரம் என ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சர்வதேச அமைப்புகளில் அப்பிரச்சினையை எழுப்ப முயன்று வருகிறது. அதன் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெக்மூத் குரேஷி பேசியதாவது:-

காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகளையும், தகவல் தொடர்பு வசதிகளையும் இந்தியா மறுத்து வருகிறது. கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய பொருட்களும், மருந்து பொருட்களும் கிடைக்கவில்லை. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் செயல்கள், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை. மனித உரிமை சட்டங்களை மீறிய செயல்.

ஆகவே, மனித உரிமைகளின் உலகளாவிய மனசாட்சியாக இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கதவை நாங்கள் தட்டி இருக்கிறோம். காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஷா மெக்மூத் குரேஷி பேசினார்.

பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு) விஜய் தாக்குர் சிங், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-

காஷ்மீர் தொடர்பாக சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் அரசியல் சட்ட கட்டமைப்புக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டவை. இந்த முடிவுகள் அனைத்தும் எங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மையான ஆதரவுடன் எடுக்கப்பட்டவை ஆகும்.

நாடாளுமன்றத்தில் பிற சட்டங்கள் நிறைவேற்றப்படுவது போலவே, இந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது எங்கள் உள்நாட்டு விவகாரம். எந்த நாடும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகளை அனுமதிப்பது இல்லை. அதைப்போல இந்த விவகாரத்தில் எந்த நாடும் தலையிடுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

மனித உரிமை என்ற போர்வையில் இந்த மன்றத்தை தவறான பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை நாம் அனுமதிக் கக்கூடாது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் ஒரு நாட்டிடம் (பாகிஸ்தான்) இருந்து வரும் இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என உலக நாடுகள் அனைத்தும் அறிந்தே வைத்திருக்கின்றன.


பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக பாகிஸ்தானால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். மாற்று ராஜதந்திர நடவடிக்கையாக அந்த நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பயன்படுத்தி வருகிறது. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான்தான், அங்கு மனித உரிமை மீறலுக்கு பிரதான காரணம் ஆகும். இவ்வாறு விஜய் தாக்குர் சிங் கூறினார்.

Daily thanthi

Leave a Reply

Your email address will not be published.