இந்திய கடற்பகுதிகளைப் பாதுகாக்க புதிய கடலோர பாகாப்புப் படை

தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதற்கும், கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் புதிய காவல்படை ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
இந்திய கடலோரப் பகுதி சுமார் 7 ஆயிரத்து 516 கிலோ மீட்டர் நீளமுடையதாகும். இதில் 13 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், ஆயிரத்து 197 தீவுகளும் அடங்கும்.
மிக நீண்ட, சிக்கலான பகுதிகளை உள்ளடக்கிய இந்திய கடலோரத்தை காவல் காப்பதில் கடற்படை, கடலோர காவல்படை, மாநில போலீசாரின் கடலோரப் பாதுகாப்பு குழுமம் ஆகியவை இருந்தாலும் கடலோரப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஆயுதப்படை ஒன்றை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த மாதம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பட உள்ளன. மற்ற மத்திய ஆயுதமேந்திய போலீஸ் படைகளைப் போலன்றி, புதிய கடல் காவல் படைக்கு அதன் சொந்த பணியாளர்கள், விதிகள், கையேடு, சட்டம், உள்கட்டமைப்பு ஆகியவை புதிதாக உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் புதிய படைக்கு இயக்குநர் – ஜெனரல் தரவரிசை அதிகாரி ஒருவர் தலைமை வகிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். 
இதற்கான திட்டம் கடந்த 2016ம் ஆண்டே தயாரிக்கப்பட்டது என்றாலும், அது அவ்வளவு உற்சாகமானதாக இல்லை என்று கூறிய அந்த அதிகாரி பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் அவ்வப்போது கடல் வழியாக ஊடுருவும் முயற்சியை தடுப்பதற்காக புதிய கடலோர பாதுகாப்புப் படையை அமைப்பது அவசியமாகிறது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
தனித்தலைமை இருந்தாலும், தேவைப்படும் நேரத்தில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து புதிய படை இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் 200 கடலோர காவல் நிலையங்கள், அதற்காக 204 படகுகள் அவற்றை நிறுத்துவதற்கு 30 படகுத் துறைகள், காவலர்கள் ரோந்து செல்வதற்கு 284 நான்கு சக்கர வாகனங்கள், 554 இருசக்கர வாகனங்களை முதற்கட்டமாக வாங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அந்த வழிகாட்டும் நெறிமுறைகளில் பரிந்துரைத்துள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.
பாலிமர்

Leave a Reply

Your email address will not be published.